ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் ஒன்று கத்தார் சென்றது.

அதில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் பயணம் செய்தனர். மொத்தம் 640 பேர்கள் நிரம்பிய அமெரிக்க விமானப்படை விமானத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க விமானம் புறப்பட்ட சமயத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் விமானத்தைச் சுற்றிவளைத்து அதில் ஏற முயற்சித்தனர். பலர் விமான சக்கர பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.