திருவிழா நிதியை நிவாரணப் பணிக்கு வழங்கிய யாழ்ப்பாண ஆலயம்!! யாழில் இப்படியும் ஒரு ஆலய நிர்வாகமா..? பெரும் வியப்பில் பொதுமக்கள்..!

பல லட்சம் ரூபா வெளிநாட்டுப் பணத்தில் போட்டிக்கு திருவிழா செய்து பந்தா காட்டும் பெரும்பாலான யாழ்ப்பாண ஆலயங்களுக்கு முற்றிலும் விதிவிலக்காக, ஒரு சிறந்த முன்தாரணமாக செயற்பட்ட யாழ்ப்பாண ஆலயமொன்றைப் பற்றிய செய்தி இது.தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல திருவிழா வழமைபோல நேற்று சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகி இருந்தது.இத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள், அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவில் அறப்பணி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதிமூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்தனர்.
இதன்படி பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை நேற்று வழங்கி வைத்தனர். காளி கோவில் அறப்பணி சபையின் இந்த மனிதாபிமானச் செயற்பாட்டை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.