நாளை முதல் முடங்கும் பல நகரங்கள் !

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல நகரங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25ஆம் திகதிவரை முடக்கப்படவுள்ளன.


அத்துடன் நாளை மறுதினம் தொடக்கம் சியம்பலாண்டுவ நகரமும் மூடப்படுகின்றது. அதேபோல, நுவரெலியா – வெளிமட நகரமும் நாளை தொடக்கம் 26ஆம் திகதிவரை மூடப்படுகிறது, மேலும் காலி – கம்புறுப்பிட்டிய நகரமும் நாளை மறுதினம் தொடக்கம் 25ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவலுக்கு மத்தியில், கொழும்பு – 12 பகுதியிலுள்ள அனைத்து இரும்பு பொருள் (ஹார்ட்வெயார்) மொத்த விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு த சிலோன் ஹாட்வெயார் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமது பணியாளர்கள், வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் S.T.S.அருளானந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பழைய சோனக தெரு, குவாரி வீதி, அப்துல் ஜபீர் மாவத்தை, பண்டாரநாயக்க மாவத்தை, மகா வித்தியாலய மாவத்தை மற்றும் அதனை அண்மித்துள்ள அனைத்து இரும்பு பொருள் (ஹார்ட்வெயார்) மொத்த விற்பனை நிலையங்களையும் மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.