தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் பதற்றம்! 200 படை துருப்புக்களை காபூலுக்கு அனுப்பிவைத்தது பிரித்தானியா

தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், பிரித்தானியா மேலும் 200 படை துருப்புக்களை காபூலுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றும் விமானங்களை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுமார் 900 பிரித்தானிய துருப்புக்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், 350 பிரித்தானியர்கள் மற்றும் இங்கிலாந்து துருப்புக்களுடன் பணிபுரிந்த ஆப்கானியர்கள் “வரும் நாட்களில்” அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், எத்தனை ஆப்கானிஸ்தான் அகதிகளை உள்வாங்குவது என்று இங்கிலாந்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், ஆனால் நாம் புதிய யதார்த்தத்தை கையாள வேண்டும் என குறிப்பிட்டுள்ளதோடு, பிரிட்டனுடன் பணிபுரிந்த 289 ஆப்கானியர்கள் “கடந்த வாரத்தில்” இங்கிலாந்துக்கு வந்ததாகவும் கூறினார்.

திங்கள்கிழமை மாலை, இங்கிலாந்தில் மொத்தமாக 3,300 க்கும் மேற்பட்ட ஆப்கானிய மொழி பெயர்ப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை மீள்குடியேற்றத்திற்காக அனுமதித்துள்ளதாகக் உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகள் இங்கிலாந்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் போது “உள்ளூர் அதிகாரிகளின் திறனால் வழிநடத்தப்படும்” என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. திங்கட்கிழமை காபூலை விட்டு வேறு எந்த ரோயல் ஏர் ஃபோர்ஸ் விமானமும் செல்லவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

150 பிரித்தானிய பிரஜைகள் செவ்வாய்க்கிழமை காலை காபூலில் இருந்து இங்கிலாந்துக்கு வரவிருந்தனர். ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கருதப்படும் 4,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய குடிமக்களை வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை இரவு, பிரித்தானிய மற்றும் தகுதியான ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற உதவுவதற்காக சுமார் 600 இங்கிலாந்து துருப்புக்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், இங்கிலாந்தில் அதிக துருப்புக்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்று உள்துறை அலுவலகம் மேலும் கூறியுள்ளது.