வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினை! உரிய அதிகாரிகளின் கவனத்திட்கு

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்குரிய போதிய வசதிகள் இல்லை எனவும் இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் வவுனியா தனிமைபடுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் குற்றம் சாடியுள்ளனர்.

வவுனியா பொருளாதார வர்த்தக மைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தொற்றாளர்கள் தங்கி நிற்பதற்குரிய சுகாதாரமான சீரான படுக்கை வசதிகள் இல்லை எனவும், வயோதிபர்களை பராமரிப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லை எனவும் குறித்த தனிமைபடுத்தல் மையத்தில் அதிகமாக நோய்தொற்று ஏற்படுவதற்கான ஏதுவான சூழலே காணப்படுகின்றது என குறித்த இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த இடத்தில் நோய்தொற்றால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டில் மெத்தை, தலையணை என்பன நோயாளர்கள் பாவித்த தொற்று ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவற்றையே வழங்குகின்றார்கள் எனவும் இதனை பயன்படுத்துவதால் தோல் சம்பந்தமான ஒவ்வாமை நோய்கள் புதிதாக ஏற்படுகின்றதெனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிருபத்தில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டிருப்பின் அவருக்கு பாரதுராமான தொற்று இல்லை எனில் தொற்றாளர் விருப்பத்திற்கமையகுறித்த நபரை வீட்டிலோ அல்லது கொரோனா சிகிச்சை நிலையங்களில் தனிமைப்படுத்த முடியும் என சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் எதுவித சுகாதார வசதிகள் அற்ற நிலையிலும் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டால் நோய் குணமாகிவிடும் என நினைத்து சுகாதார வசதிகளற்ற தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களில் தள்ளிவிடுகின்றனர்.

வயோதிபர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும், அல்லது அவர்களை வீட்டிலேயே தனிமைபடுத்தி சிகிச்சை வழங்க வேண்டும் என குறித்த இடத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே மேலே கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு சுகாதாரப்பிரிவினர் கொரோனா தொற்றளர்களுக்கான சிகிச்சை வழங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொற்றாளர்களுக்கான சுகாதாரத்துடன் கூடிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் எனவும் அவ்வாறு தங்களால் தொற்றாளர்களுக்கான வசதி ஏற்படுத்தி கொடுக்க முடியாதவிடத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் கோரியுள்ளனர்.

Source : virakesari.lk