அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்!

2022ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் நேரக் கொடுப்பனவுகளைத் தவிர வேறு கொடுப்பனவுகளை மதிப்பீடு செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு புதிதாக வேறு எந்த பிற கொடுப்பனவுகளையும் மதிப்பீடு செய்யக் கூடாது என அமைச்சுகளின் பிரதானிகள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் நிதி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஆண்டிற்கான ஊதியங்கள் மற்றும் கூடுதல் நேர ஊதியம் அனைத்தும் தனித்தனியாக காட்டப்பட வேண்டும்.

மேலும் 2021ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் செலவின மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டும்.

அத்துடன் எந்தவொரு முறையிலும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்களை இணைத்துக் கொள்பவர்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என நிதியமைச்சின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.