பொலிஸாரின் வியத்தகு செயல்! குவியும் பாராட்டுக்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமானது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இந்த வருட திருவிழா இடம்பெறுகின்றது.

நேற்றையதினம் கொடிச்சீலை கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.

இதன்போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தின் வெளியில் இருந்து நல்லூரானை தரிசித்துச் சென்றனர்.

இந்த நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் தங்களது காலணிகளை கழற்றி தமது கைகளில் எடுத்துக் கொண்டு ஆலய வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பலரும் தமது பாராட்டுக்களையும், நல்லூரானின் ஆசி கிட்டட்டும் என்று தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.