உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ சில டிப்ஸ்!

வாழ்க்கை.. அதன் போக்கில் மிக அழகாக, மிகச் சரியாக போய்க்கொண்டுதானிருக்கும். ஆனால், அதனுடன் பயணிக்கும் நாம் அதை ரசிக்கிறோமா… சரியான விதத்தில் அணுகுகிறோமா? இதற்கான கேள்விகள் பல விஷயங்களில் அடிபட்டபிறகே உணர்கிறோம்.

ஒருவர் நம்மை ஒதுக்கும் போது அழுகிறோம். பிறகுதான் அவர் நம்மை எங்கே வைக்க நினைக்கிறாரோ அங்கிருந்து வாழ பழகுகிறோம்.

ஒரு விஷயத்தை வெறுத்து ஒதுக்குகிறோம். ஆனால் அதுதான் நம்மை மீண்டும் மீண்டும் தேடி வந்து தொல்லைகொடுக்கிறது. பிறகுதான் அந்த தொல்லையை எப்படி சமாளிப்பது என்று கற்கிறோம்.

இப்படியே போராட்டங்களுக்கு இடையே, வெறுப்பு, விறுப்புகளுக்கு இடையே நம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டே இருந்தால், நமது நீண்ட நெடுந்தூர பயணத்தில் நாம் ரசித்தவை என்றோ, நம்மை நாம் செழுமைப்படுத்திக் கொண்டது என்றோ பெரிதாக எதுவுமே இருக்காமல் போய்விடலாம்.

எனவே, எப்பொழுது பார்த்தாலும் இந்த உலகம் நம்மை எப்படி நடத்துகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதோ அல்லது அழுவதோ வேண்டாம். நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். நம்மை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது எப்படி?

உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் செய்வதற்கு என்று வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் இரண்டு நாள்களோ உங்களுக்கென ஒதுக்கி, அதில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் நேரத்தில் அமைதியாக அமர்ந்திருங்கள். அது போதும்.

நேரமே கிடைக்கவில்லையென்றால்..
எவ்வளவுதான் முயன்றும் எனக்கென நேரம் ஒதுக்கவே முடியவில்லை என்கிறீர்களா? ஒன்றும் பிரச்னையில்லை. லேசாக முடியவில்லை என்று ஒரு நாள் இருக்குமல்லவா, அதனை ரொம்ப முடியவில்லை என்று நினைத்து விடுமுறை எடுத்து விடுங்கள். யாரிடமும் சொல்லாதீர்கள் இந்த ரகசியத்தை. ரொம்ப முடியவில்லை. அதனால் ஓய்வு எடுப்பதாகவே குடும்பத்தினர் நினைக்கட்டும். தப்பில்லை. அன்றைய தினம் உங்களுக்குப் பிடித்தவற்றை செய்யுங்கள். இல்லையென்றால் நிம்மதியாக ஓய்வு எடுத்து மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோடுங்கள்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும் விஷயங்களுக்காக செலவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகம், பரிசுப் பொருள்களை வாங்கி உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். ரொம்ப நாளா ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டேயிருந்தால், அதை மனம் கூசாமல் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்காக எதையாவது வாங்குங்கள். செலவிடுங்கள்.

உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள். கடந்த காலங்களில் நீங்கள் மிகச் சரியாக செய்த செயலை நினைத்து அவ்வப்போது பாராட்டிக் கொள்ளுங்கள். வெளியே செல்ல வேண்டும், தனியாக என்றால் பயம் கொள்ளாதீர்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், இவ்வளவுப் பெரிய உலகத்துக்கு நீங்கள் தன்னந்தனியாகத்தான் வந்திருப்பீர்கள்.

ஏமாற்றுங்கள்.. உங்களால் முடியாது என்று இதுவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த எல்லாவற்றையும் முடியும் என்று காட்டி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். இதுவரை ஒரு விஷயம் மட்டும் எனக்கு ரொம்ப பயம்ங்க என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தீர்களானால், முதலில் அதைச் செய்துவிட்டு வந்து ஒரு சபாஷ் போடுங்கள்.

இசையை ரசியுங்கள்.. படியுங்கள்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசையை ரசியுங்கள். பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். இதைவிட பேரதிர்ஷ்டம் வேறில்லை.

இயன்றதை உதவிடுங்கள்
உங்களால் இயன்றதை பிறருக்கு உதவுங்கள். இது ஆழ் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கும். உங்களைக் கடந்து செல்லும் தேவையிருக்கும் யாருக்கேனும் அவர் கேளாமலேயே உதவும்போது அவர் முகத்தில் பூக்கும் புன்னகை நிச்சயம் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும். அதுதான் விலைமதிபப்பற்றது.