எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு ஏற்படுமென சுகாதார தரப்பு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்து செல்லும் கொவிட் பரவல்நிலை தொடர்ந்தால், எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு ஏற்படுமென சுகாதார தரப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 5 உயிரிழப்புக்கள் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக கடந்த சில தினங்களாக, நாளாந்தம் 100ற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி, நேற்று முன்தினம் 124 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது. இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 5,464 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.