ஜப்பானில் குடியேற்ற நிலையத்தின் பொறுப்பற்ற தன்மையின் விளைவாக மார்ச் மாதம் இலங்கையைச் சேர்ந்த 33 வயதான விஷ்மா சந்தமாலி உயிரிழந்தார்.காலாவதியான மாணவர் விசாவில் விஷ்மா சந்தமாலி ஜப்பானில் இருந்தமை தெரியவந்தமையினால், அவர் குடியேறியவர்களுக்கான தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். விசாரணையின் போது, நிலையத்தின் ஊழியர்கள் தங்கள் கடமைகளை புறக்கணித்ததாக தெரியவந்துள்ளது.குறிப்பாக மருத்துவ பரிசோதனைக்கான பெண்ணின் கோரிக்கைகள் குறித்து அவர்கள் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை. மேலதிகமாக இலங்கை பெண் இறந்த நாளில் அவளுக்காக ஒரு அம்புலன்ஸ்கூட வரவழைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் குடியேற்ற கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்ததன் விளைவாக, மே மாதம், ஜப்பானிய அதிகாரிகள் குடியேற்றச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலத்தை திரும்பப் பெற முடிவு செய்தனர்.இந்நிலையில் ஜப்பானின் குடிவரவு நிறுவனம் செவ்வாய்க்கிழமை நடத்திய விசாரணையில் மத்திய ஜப்பானில் உள்ள ஒரு குடியேற்ற நிலையம் மார்ச் மாதத்தில் இறந்த இலங்கை பெண்ணை தவறாக நடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவி உயிரிழந்தமை தொடர்பில் ஜப்பானின் குரவரவு நிறுவனம், குறித்த குடியேற்ற நிலையத்தின் உயர் அதிகாரிகளையும் மேற்பார்வையாளர்களையும் கண்டித்துள்ளது.
ஜப்பானின் நீதி அமைச்சர் யோகோ காமிகாவா, நாகோயா நகரத்தில் குடியேற்ற நிலையத்தின் ஊழியர்களின் செயலற்ற தன்மைக்கு மன்னிப்பு கேட்டதுடன், குடியேற்ற மையங்களின் வேலையை சீர்திருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதேவேளை அகதி அந்தஸ்து அனுமதிகளில் மிகக் குறைந்த சதவீதத்தை கொண்ட நாடு ஜப்பான் ஆகும். கடந்த ஆண்டு குடிவரவு சேவையின் படி, கிட்டத்தட்ட 4,000 விண்ணப்பங்களில் 47 விண்ணப்பங்களும் 2019 இல் 10 400 விண்ணப்பங்களில் 44 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.