தொடர்ந்து பல் துலக்காமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?

அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் இரண்டு முறை பல் துலக்குகிறோம். பெரும்பாலான மக்கள் ஒரு வேளை மட்டுமே பல் துலக்குகிறார்கள்.

சிலர் தொடர்ந்து பல நாட்கள் பல் துலக்காமல் கூட இருப்பார்கள்.

அப்படி இருந்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

வாயில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வளர்ந்து வரும். இவை பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை உண்ண முயற்சிக்கும்.

அப்போது அந்தப் பாக்டீரியாக்கள் சுரக்கும் அமிலம் காரணமாகப் பல் வெளிப்பகுதி (Enamel) அரித்து ஈறுகளில் பாதிப்பு ஏற்படும்.

பல் துலக்குவதன் மூலம், பற்களின் மீது பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறோம். உணவு உண்ட பின் சுமார் 48 மணி நேரங்கள் பல் துலக்காமல் இருந்தால் மட்டுமே, பற்களைப் பாதிக்கும் அளவுக்கு பாக்டீரியாக்கள் வளரும்.

தினசரி ஒருமுறை பல் துலக்கினாலே போதும்தான். ஆனால் பிஸ்கட்ஸ், சாக்லேட் போன்ற பற்களில் ஒட்டிக்கொள்ளும் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது, கூடுதல் வீரியத்துடன் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது.

எனவே, காலையிலும் இரவிலும் பல் துலக்குவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டபின் வாயைக் கொப்பளிப்பது, தினசரி இருமுறை பல் துலக்குவது என்பது ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.