இரவில் தூங்கும்போது சாக்ஸ் அணியும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

இரவில் தூங்கும் போது சாக்ஸ் அணிந்துகொண்டு நீங்கள் தூங்குபவர் என்றால் அது மிகச்சரியானதுதான். இரவில் தூங்கும்போது சாக்ஸ் எனும் காலுறை அணிந்து தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தற்போது குளிர்காலத்தில் பலரும் கடுங்குளிர் காரணமாக தூக்கத்தைத் தொலைத்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு எளிய தீர்வு. சாக்ஸ் அணிந்து தூங்குவது.

உங்கள் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​அவை இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும் குறைந்த இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தூக்கம் வர சிரமப்படலாம். ஆனால், சாக்ஸ் அணியும்போது கால்கள் வெப்பமாவதால் நல்ல தூக்கம் கிடைக்கிறது.

மேலும், உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் கால்களை குளிரிலிருந்து காத்து மிதமாக வெப்படுத்துவதன் மூலமாக, இது தூங்கும் நேரம் என்பதை பாதங்கள் மூளைக்கு எடுத்துரைக்கின்றன.

இரவில் சாக்ஸ் அணிவது தூக்கத்திற்கு மட்டுமின்றி பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

உங்கள் குதிகால் வறண்டு போகாமல் இருக்கவும் பாக்டீரியா போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள், பொதுவாக கால்விரல்கள் வீங்கும் தன்மையான ரேனாட் நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

சிலருக்கு சாக்ஸ் அணிவது உடலை வெப்பநிலையிலிருந்து குளிர்விக்க பயன்படுகிறது.

உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

மென்மையான இழைகளால் ஆன சாக்ஸ் அணிவது சிறந்தது. முடியாதவர்கள் வழக்கமான பருத்தியால் ஆன சாக்ஸ்களை அணியலாம்.

நீங்கள் தேர்வு செய்யும் சாக்ஸ் இறுக்கமானதாக இருக்கக்கூடாது. மிகவும் இறுக்கமாக இருந்தால் கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே, இலகுவான இறுக்கமில்லாத சாக்ஸ்களை அணிய வேண்டும்.

முன்னதாக, தூங்குவதற்கு முன் உங்கள் கால்களை மாய்ஸ்சரைசர் கொண்டு லேசாக மசாஜ் செய்தபின்னர் சாக்ஸ் அணியுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேலும் அதிகரிக்க உதவுகிறது.

சுருக்கமாக இருக்கும் சாக்ஸ் அணிவதைத் தவிருங்கள். பருத்தி, கம்பளியால் ஆன சாக்ஸ் அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள். இறுதியாக சாக்ஸ் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே ஒரு சாக்ஸை பயன்படுத்த வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிலருக்கு சாக்ஸ் அணிவதால் கால்கள் அதிகம் வெப்பமடைவது போல இருக்கலாம். எனவே, அவ்வாறு உணர்ந்தால் அவற்றை உடனடியாக கழற்றி விடவும். வேண்டுமெனில் இதற்காக மருத்துவரை கூட ஆலோசிக்கலாம்.

சாக்ஸ் அணிய விரும்பாதவர்கள் உறங்கச் செல்லும்முன் கால்களில் இதமான சூடு கொண்ட தண்ணீரை ஊற்றிவிட்டு படுக்கச் செல்லலாம். நன்றாக தூக்கம் வரும்.