இந்த 10 விஷயங்களை எப்போவும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்!

ஒரு சில விஷயங்களை எல்லாம் மறைத்து தான் ஆக வேண்டும் என்றால் அதை மறைத்து தான் ஆக வேண்டும். நான் உண்மையாக இருக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன் என்கிற பெயரில் எல்லாவற்றையும் எல்லாரிடமும் கூறிக் கொண்டிருந்தால் பின்னாளில் வரும் ஆபத்துகளை சமாளிப்பதற்குள் உங்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். அந்த வரிசையில் நாம் எவரிடமும் சொல்லக் கூடாத 10 விஷயங்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதல் விஷயம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்? என்பதை எப்பொழுதும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. உங்களுடைய குடும்பத்தினரை தவிர நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்கு தேவையில்லாத ஒன்று தான். அதனால் ஏற்படும் பொறாமை, கெடுபலன்கள் போன்றவை ஏற்படாமல் இருக்க அதை ரகசியமாகவே வைத்து இருப்பது நன்மை தரும்.

இரண்டாவதாக உங்களுடைய வயதை யாரிடமும் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். வயதை பார்த்து பலரும் திறமையை எடை போடுவார்கள். திறமைக்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தி கொண்டிருக்க முடியாது.

மூன்றாவது குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய வலி மற்றவர்களுக்கு செய்தியாகத் தான் உணர்ந்து கொள்ள முடியும், எனவே குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

நான்காவது நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் மற்றும் கற்றுக் கொள்ளக் கூடிய மந்திரங்களை எப்பொழுதும் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் நன்மைக்காக நீங்கள் செய்யும் இந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது அதன் ஆற்றல் குறையும். முழு ஈடுபாட்டுடன் சொல்லும் மந்திரமே பலனையும் கொடுக்கும்.

ஐந்தாவதாக கணவன்-மனைவிக்குள் நடக்கும் காதலையும், ஊடலையும் பற்றிய ரகசியத்தை வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அது எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவி பந்தம் என்பது எல்லா உறவிற்கும் அப்பாற்பட்டது, அதில் நடக்கும் ரகசியங்களை வெளியில் சொல்வது என்பது தேவையில்லாத விஷயம்.

ஆறாவதாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருத்துவ ரீதியான மருந்து மாத்திரைகள் மற்றும் அறிவுரைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒன்று சொல்லப் போய் அதை அவர்கள் கடைப்பிடித்து ஏதாவது ஒன்று ஆனால் அது தேவையில்லாத பிரச்சனை தான். மேலும் அவர்கள் உங்களை ஒரு நோயாளி போல பார்ப்பார்கள் எனவே இவற்றை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

ஏழாவது புண்ணிய காரியத்திற்காக நாம் மனமுவந்து செய்வது தான் தானம். இந்த தானத்தை பற்றிய ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருப்பது தவறானது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது தான் தானம்! நான் இதை மற்றவர்களுக்கு செய்தேன் என்று சொல்லிக் கொள்வது அநாகரிகமானது.

எட்டாவது வாழ்வில் எவ்வளவோ அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து இருப்போம். அவற்றை நம்மோடு நம் உணர்வோடு வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றை மற்றவர்களிடம் சொல்லி நம்முடைய திறமையை நாமே குறைத்துக் கொள்ளக்கூடாது. அதிலிருந்து எப்படி வெற்றி அடைவது? என்பதை பற்றிய சிந்தனை மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும். அவமானத்தை திரும்பிக்கூட பார்க்காதீர்கள்.

ஒன்பதாவது பதவி, புகழ் என்பது ஒரு போதை என்று கூறுவார்கள். உங்களுடைய அந்தஸ்து, புகழ் பற்றிய விஷயங்களை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் இதை பந்தா காட்டுவதாக நினைத்துக் கொள்வார்கள். மற்றும் சிலர் பொறாமை படவும் செய்வார்கள். இது இரண்டுமே நமக்கு தேவையில்லாத விஷயம் தான்.

பத்தாவதாக உங்களுடைய பொருளாதார நிலையை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நீங்கள் எவ்வளவு வசதியாக இருக்கின்றீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. உங்களை சார்ந்தவர்களுக்கும் தானாகவே தெரிந்தால் போதும்.