சமுர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உதவி…அரசாங்கத்தின் புதிய தீர்மானம்…முழுமையான தகவல்கள்…

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஒன்றையும் நிவாரணப் பொதி ஒன்றையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய 23 இலட்சம் சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாவும் நிவாரணப் பொதியும் வழங்கப்பட உள்ளது.இந்த நிலையில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கப்பட உள்ள நிவாரணப் பொதியில் அரிசி, மா, பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களை உள்ளடக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.1 முதல் 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 1500 ரூபா பெறுமதியான பொருட்களும், 3 முதல் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 2500 ரூபா பெறுமதியான பொருட்களும் 5 அல்லது 5 க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 3500 ரூபா பெறுமதியான பொருட்களும் அடங்கிய பொதி வழங்கப்பட உள்ளது.இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, அரச அலுவலர்களுக்கான வருடாந்த பண்டிகை முற்பணத்தை வழங்கவும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதேவேளை, ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தினங்களினுள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6 ஆந் திகதி கொடுப்பனவுகளை நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அஞ்சல் அலுவலகங்கள் அல்லது அந்தந்த வங்கிகள் ஊடாக இந்த ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் ஓய்வு பெற்றோரின் வீடுகளுக்கு அல்லது கிராம அலுவலர் பிரிவுக்கு அஞ்சல் திணைக்களம் ஊடாக ஓய்வூதியம் கொண்டுவந்து ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தந்த வங்கிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வோருக்கான கொடுப்பனவுகள், அந்தந்த வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 2,3 ஆகிய திகதிகளில் வரவு வைக்கப்பட உள்ளது.ஓய்வுதியம் பெறுவோர் அது குறித்து தமது கிராம அலுவலருக்கு முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம், ஊரடங்கு சட்ட காலத்தில் வங்கிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.இதற்காக, அந்தந்த நகரங்களில் காணப்படும் அனைத்து வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு கிளையையேனும் இந்நாட்களில் திறந்து வைத்திருக்க அரச மற்றும் தனியார் வங்கியாளர்கள் இணங்கியுள்ளனர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.