உரும்பிராயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரிய பயன்தரு ஆலமரத்தை வெட்டிச் சரிக்க முயற்சி ?

யாழ் உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரிய ஆலமரத்தை வெட்டிச் சரித்துவிடும் முயற்சியில் ஆலய நிர்வாகமொன்று இறங்கியுள்ளது.இதனையறிந்த ஊரவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் இந்த முயற்சியில் தாம் ஈடுபடவில்லையெனவும் கிளைகள் மட்டுமே
அகற்றும் பணியில் மட்டும் தாம் செயல் பட்டதாகவும் ஆலய நிர்வாகம் கூறுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ;
யாழ்.பலாலி வீதி உரும்பிராய் வடக்கிலுள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் ஆலய வீதியில் பெருவிருட்சமாக கிளை பரப்பி நிற்கும் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் பிள்ளையார் ஆலயத்திற்கும் அயலிலுள்ள பாடசாலைக்கும் வீடுகளுக்கும் இடைஞ்சலாக அமைந்துள்ளதாக காரணங்களைக் கூறி இந்த பாரிய ஆலமரத்தை இவ்விடத்தில் இருந்து அகற்றி விடவேண்டும் என முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான எதிர்ப்புகளினால் மரத்தை வெட்டும் முயற்சியினை ஆலய நிர்வாகம் நிறுத்தி உள்ளதாக தெரிகின்றது.

எனினும் தாம் இந்த மரத்தை முழுமையாக அகற்றவில்லையென்றும் வெறும் கொப்புகளை மட்டுமே வெட்டியதாகவும் நிர்வாகம் கூறுகின்றது.சில தினங்களுக்கு முன்னர் இந்த பாரிய ஆலமரத்தின் கிளைகளை ஏற்கனவே வெட்டி வீழ்த்திவிட்டார்கள். சில தினங்களில் இந்த மரத்தை முழுமையாக வெட்டி அகற்றிவிட நிர்வாகத்தினர் முயற்சிப்பதாக இப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆலய நிர்வாகத்திலுள்ளவர்களின் இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஒரு மரத்தை சில நிமிடங்களில் வெட்டி வீழ்த்திவிடலாம். எனினும் அதனை உண்டாக்குவதற்று எத்தனை வருடங்கள் செல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.எமது ஆரோக்கியமான வாழ்வுக்கு மரங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

புதிதாக மரங்களை நாட்டி நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமே தவிர தேவையற்ற வகையில் பயன்தரு மரங்களை அகற்றிவிட முயற்சிக்க கூடாது.