கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெல்டா கோவிட் திரிபுடன் 117 பேர் அடையாளம்

கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா கோவிட் திரிபுடன் 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கோவிட் பரிசோதனைகளிலேயே இவ்வாறு டெல்டா கோவிட் திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இன்று இதுவரையில் 2, 792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 324, 221 ஆக அதிகரித்துள்ளது.