நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலைப்பார்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்!

கண்களை ஓய்வின்றி நீங்கள் பயன்படுத்துபவராக இருப்பின் பார்வையில் சிக்கல் அல்லது வேறு ஏதேனும் தீவிர கண் கோளாறுகள் இருந்தால் அவசியம் நீங்கள் மருத்துவரை சந்தித்தாக வேண்டும்.

வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் பலர் லேப்டாப் அல்லது சிஸ்டமே தான் கதி என்று கிடக்கின்றனர். இன்னும் பலர் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுவதும் ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து கண்களை எடுக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பலர் மேற்கண்டவாறு தங்களது வாழ்க்கையை சுமார் 1 வருடங்களுக்கும் மேலாக கழித்து வருவதால் இப்போது பலருக்கு கண் சோர்வு அல்லது கண் சிரமம் (Eyestrain) பொதுவான ஒன்றாக இருக்கிறது.

இது போக பள்ளிகள் மூடியுள்ளதால் குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புகளுக்காக லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போனே முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு ஸ்கிரீனை பார்த்து வருகின்றனர்.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டும்போது அல்லது கணினித் திரைகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் கண்கள் சோர்வுற்று கண் எரிச்சல் ஏற்படும் ஒரு பொதுவான நிலையே Eye strain என்று குறிப்பிடப்படுகிறது.

நீங்கள் திரை முன் அமர்ந்திருக்கும் நேரங்களில் தவறாமல் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறையும் 20 வினாடிகள் பிரேக் எடுத்து கொண்டு 20 அடி தூரத்தில் இருக்கும் பொருட்கள் அல்லது ஏதேனும் ஒன்றின் மீது பார்வையை செலுத்த வேண்டும்.

பின்னர் வழக்கம் போல வேலையே தொடரலாம். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தினாலே உங்களுக்கு கண்சோர்வு அல்லது கண்ணெரிச்சல் இருப்பின் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

மேலும் இந்த கண் சிரமத்திலிருந்து விடுபட குளிர்ந்த நீரை கைகளில் எடுத்து கண்களை சில வினாடிகள் மூழ்க செய்வது அல்லது குளிர்ந்த நீரை நன்றாக கண்களில் படும்படி தெறிக்க செய்வது கண்களின் வெப்பநிலையை குறைத்து கண் எரிச்சலை போக்க உதவும்.

சிறிதளவு துளசி மற்றும் புதினாவை தண்ணீரில் ஊற வைத்து விட்டு, இரவு படுகைக்கு செல்லும் முன் அந்த நீரை கொண்டு கண்களை கழுவுவதன் மூலம் கண் எரிச்சல், கண் சோர்வு , சிவந்த கண்கள், கண்ணயர்ச்சி, உலர் கண்கள் உட்பட கண் சம்பந்தமான தற்காலிக சிரமங்கள் கணிசமாக குறைந்து விடும்.