டெல்டா மாறுபாடு கட்டுப்பாட்டை மீறி பரவும் அபாயம் இருப்பதால் வைத்தியர்கள் மக்களுக்கு எச்சரிக்கை!

டெல்டா மாறுபாடு கட்டுப்பாட்டை மீறி பரவும் அபாயம் இருப்பதால், எதிர்வரும் வாரங்களில் மோசமான மருத்துவ பேரலைக்கு இலங்கை செல்லும் ஆபத்து உள்ளதாக முன்னணி மருத்துவ வல்லுநர்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் சிரேஷ்ட மருத்துவர்கள், மேல் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளிகளால் நிரம்பியுள்ளதாகவும், தற்போது 3இல் இரண்டுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒக்ஸிஜன் தேவையை சார்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று மட்டும் 610 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு சிகிச்சை அறைக்கு நான்கு ஒக்ஸிஜன் கருவிகளுடன் படுக்கைகள் பொருத்தப்பட்டிருந்தன, பின்னர் அது ஒரு சிகிச்சை அறைக்கு 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

தாம் ஒக்ஸிஜன் படுக்கைகளுடன் தயாராக இருந்தபோதும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுவரை, இலங்கை பதிவு செய்த மிக மோசமான மருத்துவ பேரழிவு மலேரியா தொற்றுநோயாகும்.1934, 1935 களில் இதன்காரணமாக 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், இலங்கையில் ஒவ்வொரு 20 பேரில் ஒருவர் இந்த நோயால் இறந்தார் என்று கணிப்பிடப்பட்டது.

இருப்பினும், டெல்டா உலகளாவிய அழிவை உருவாக்கி வருவதால், எதிர்வரும் வரும் வாரங்களில் கொவிட் பரவுவது, மலேரியா தொற்றுநோயை விட மோசமாக இருக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நோயாளிகளின் திடீர் உயர்வு டெல்டாவிலிருந்து வந்ததாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

ஒரே ஒரு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டெல்டா வகையிலிருந்து அதிக ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், எனவே பொதுமக்கள் தடுப்பூசிகளை விரைவில் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது, 30 அகவைக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி போட்ட இலங்கையின் சாதனை உலகின் மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது, ஆகஸ்ட் இறுதிக்குள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் அளவு தடுப்பூசியை செலுத்துவதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு இப்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்புக்கு வருகை தரும் பிற மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் டெல்டா வகையை மீண்டும் அந்த மாகாணங்களுக்கு எடுத்துச் செல்வது மேலும் பேரழிவை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா ஏற்கனவே இங்கு வந்துள்ளதால், நாடு பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் வைரஸால் அதிக இறப்புகள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே இறுக்கமான முகக்கவசங்களை அணியாறும், மூடிய இடங்களுக்குள் ஒன்றாக இருந்து உணவு உண்பதைத் தவிர்க்குமாறும் மருத்துவ நிபுணர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.