பலரும் தெரிந்திராத சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் சிறப்புகள்..!!

விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அதேபோல், மாதந்தோறும் சதுர்த்தி வரும் .அதாவது அமாவாசையில் இருந்து நான்காம் நாளும்பெளர்ணமியில் இருந்து நான்காம் நாளும் சதுர்த்தி வரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவது ரொம்பவே சிறப்பு.மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதி பெருமானுக்கு, வெள்ளெருக்கம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரியத் தடைகள் யாவும் விலகிவிடும்.மேலும், சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.பதியான சிவனைப் பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன், மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.