தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

பல ஆண்டுகளாக நமக்கு தெரியாமலேயே செய்து வரும் யோகாசனம் தான் தோப்புக்கரணம். நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம்.

இதை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்று குறிப்பிடுகின்றனர்.

சரியான முறையில் தோப்புக்கரணம் போடுவது எப்படி?

நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும். இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியைபிடித்து கொள்ள வேண்டும்.

வலது கையை மடக்கி வலது கையின் பெருவிரலால் இடது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும்.

அப்படி பிடிக்கும் போது கட்டை விரல் காதின் முன் புறமும் ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும். வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும்.

உட்காரும் நிலை நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்யலாம். எழும் போது மூச்சை வெளியே விட்டபடி எழ வேண்டும்.

இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

தோப்பு கரணம் போடும் போது நம் காது மடல்களை பிடித்து கொள்கிறோம் அல்லவா. அப்போது தான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கும்.

உட்கார்ந்து எழும்போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.

இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை,வயிறு கண்கள் கீழ் மற்றும் மேல்தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்பு புள்ளிகள் அமைந்திருக்கின்றன.

தோப்புக்கரணம் போடும் போது இந்த எல்லா உறுப்புகளுமே பயனடைகின்றன.

இதன் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. இதனால் மூளை சுறுசுறுப்படைந்து நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

தோப்புக்கரணத்தை தொடர்ந்து போடும் போது மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவதாக கூறப்படுகிறது.

இப்பயிற்சியால் இடுப்பில் இருக்கும் எலும்பு, தசை ஜவ்வு போன்றவை வலுவடைகின்றன.

இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்கலாம். கர்ப்பிணிகள் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.