ஜோதிடத்தை நம்பிய தாயால் 23 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

தனது மகளிற்கு பிரசவமானால் குழந்தை அல்லது மகள் உயிரிழப்பார்கள் என ஜோதிடர் கூறியதை பேச்சை நம்பிய தாயொருவர், மகளை கடத்திச் சென்று பலவந்தமாக கருக்கலைப்பு செய்த கொடூர சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

23 வயதான கர்ப்பிணி மகளை கடத்திச் சென்று 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், தாயாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 23ஆம் திகதி கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹுனுபிட்டி நஹேன பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணின் மகள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

பெண்ணின் தாயார் முதலில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், மகள் விடாப்பிடியாக நின்றதையடுத்து, ஜோதிடரை சந்தித்து மகளின் எதிர்காலம் குறித்து அவர் வினவிய நிலையில் 24 வயதும் 10 மாதங்களும் முடிவதற்கு முன் அந்த யுவதி கருத்தரிக்கக் கூடாது என்றும், மீறி கருத்தரித்தால் தாய் அல்லது சேய் உயிரிழப்பார்கள் என்றும் சோதிடர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மகளின் விடாப்பிடியினால் திருமணம் செய்து கொடுத்தாலும், அவர் கர்ப்பம் தரித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்.

எனினும் மகள் கருத்தரித்துவிட்டதை அறிந்த தாயார், மகளின் கர்ப்பத்தை அழிக்க திட்டமிட்டு, கடந்த 15ஆம் திகதி வீட்டில் மருமகன் இல்லாத சமயத்தில், மேலும் இருவரின் துணையுடன் வாகனமொன்றில் மகளை கடத்திச் சென்றுள்ளார்.

கேகாலை பகுதியிலுள்ள வீடொன்றில் 5 நாட்கள் தங்க வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டதுடன், யுவதிக்கு ஊசி செலுத்தியதுடன், வலுக்கட்டாயமாக 4 மாத்திரைகள் அவரது பெண்ணுறுப்பிற்குள் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்ற பெண், கணவனை அழைத்து விடயத்தை தெரிவித்ததையடுத்து, அவர் கேகாலை சென்று மனைவியை மீட்டார்.

அதன் பின்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், குறித்த சம்பவம் கிரிபத்கொட பொலிசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, கடந்த 23ஆம் திகதி தாயார் கைது செய்யப்பட்டார். இதேவேளை இந்த கொடூரமான செயலை செய்த கைதான பெண் ஒரு அரச உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.