ஒன்பது ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!

இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மழையுடனான வானிலை நிலவியமையினால், போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 226 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு எதிராக 9 வருடங்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் போட்டி ஒன்றில் வெற்றி ஒன்றை கண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா, இலங்கையுடனான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.