இலங்கை உட்பட 16 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை

புதிய கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டிற்குள் நுழைவது மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, இந்தத் தடை நடைமுறைக்கு வருவதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், கொங்கோ குடியரசு, இந்தோனேசியா, லைபீரியா, நமீபியா, நைஜீரியா, உகண்டா,சியரா லியோன், தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் சாம்பியா நாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் புதிய விகாரம் பரவாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கண்ட நாடுகளில் கடந்த 14 நாட்களைக் கழித்த அனைத்து பயணிகளும் மறு அறிவிப்பு வரும் வரை எமிரேட்ஸ்ஸூக்குள் வருகை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த தடை ஐக்கிய அரபு அமீரக பிரஜைகள், ஐக்கிய அரபு எமிரேட் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பொருந்தாது என்று இலங்கை தூதரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.