பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – வானிலை அலுவலகம் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையை அடுத்து, அந்நாட்டு வானிலை அலுவலகம் தனது முதல் தீவிர வெப்ப எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு நோக்கி ஹாம்ப்ஷயர் வரையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை 23:59 மணி வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு (PHE), இங்கிலாந்தின் பிற சுகாதார நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் நான்கு நாடுகளும் வார இறுதி நாளான நேற்று ஆண்டின் அதிக வெப்ப நிலையை பதிவு செய்திருந்தது.

வடக்கு அயர்லாந்தில் வெப்பநிலை னிக்கிழமை 30 செல்ஷியஸிற்கு மேல் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டி டவுனில் உள்ள நியூட்டவுனார்ட்ஸுக்கு அருகிலுள்ள பலிவாட்டிகொக் பகுதியில் 31.2 சி வெப்பநிலையை பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னர் 1976 மற்றும் 1983 கோடைகாலங்களில் 30.8 செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தமையே அதிகூடிய வெப்பநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட யோர்க்ஷயரில் உள்ள லிண்டன்-ஆன்-யூஸில் 30.7 செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.

வேல்ஸில், மோன்மவுத்ஷையரில் 29 செல்ஷியஸும் ஸ்கொட்லாந்தில், டம்ஃப்ரைஸ் மற்றும் காலோவே பிராந்தியத்திலும், 28.2 செல்ஷியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.