அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மே 11ஆம் திகதியில் இருந்து கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையினர் தமது பணிகளை மீளஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான பணிப்புரைகள் அனைத்து நிறுவன தலைமைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும், நிறுவனங்களின் தலைமையாளர்கள் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைபிடிக்கவேண்டும்.தனியார்துறையினர் மே 11ஆம் திகதியில் இருந்து தமது பணிகளை ஒவ்வொரு நாளும் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் பணிகளுக்கு யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது நிறுவனத் தலைமைகளின் பொறுப்பாகும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும், தொடருந்துகளும் அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களை மாத்திரம் பணிகளுக்கு ஏற்றியிறக்கும் சேவைகளை மேற்கொள்ளும்.

அதேநேரம் அத்தியாவசிய தேவைகளுக்கான பொதுமக்களை தவிர்ந்த ஏனையோர் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முகமாக வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.வெளியில் செல்லும் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே செல்லமுடியும்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் மே 11ஆம் திகதி முதல் தமது தேசிய அடையாள அட்டைகளின் இறுதி இலக்க அடிப்படையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.எனினும் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத இடங்களுக்கு இந்த தேசிய அடையாள அட்டை முறை அவசியமற்றது என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கிடையில் ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளனர்