மீண்டும் உலகை அச்சறுத்தும் மற்றுமொரு வைரஸ் மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு- B வைரஸ் (Monkey-B virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மே 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது எச்சில் மற்றும் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு B’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

‘குரங்கு B’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக உயிரிழந்துள்ளமை சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932 இல் கண்டறியப்பட்டது.

இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம் (70-80) அதிகம். குரங்கு, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மனிதர்களை ‘குரங்கு B’ வைரஸ் தாக்கும் போது 1-3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.