இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கோடிக்கு கோவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கோடி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் வீரர்களில் இவரும் அடங்குகிறார்.

இந்த நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் வரவிருக்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளை மறு அட்டவணைப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் தமது அணியினர் தங்கியிருக்கும் தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் இருந்து இலங்கை அணியை வேறு விருந்தகம் ஒன்றுக்கு மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஏற்பட்ட கோவிட் தொற்றை காட்டிலும் விருந்தகத்தின் துணை ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானதை அடுத்தே இந்தியா கிரிக்கெட் சபையால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் முழு இலங்கை அணியினரும் தாஜ் சமுத்திராவிலிருந்து சுமார் 1.5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கிராண்ட் சினமன் விருந்தகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.