வீட்டில் தெய்வாம்சம் எப்போதும் பரிபூரணமாக நிறைந்திருக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்

வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதும் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை இவ்வாறு வரும் நாட்களில் விசேஷ பூஜை செய்வதும் நமது வழக்கமாக உள்ளது. இறைவனின் அருளைப் பெறுவதற்காகவே இவ்வாறான பூஜைகளை நாம் செய்கிறோம். அதே சமயம் இறையருள் எளிதில் நமக்குக் கிடைக்க பச்சை கற்பூரம் பேருதவி புரிகிறது. தெய்வ அருள் நமக்கு முழுமையாகக் கிடைப்பது மட்டுமல்லாமல் இந்த பச்சைக் கற்பூரத்தினால் நமக்கு பல நன்மைகலும் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

நாம் கோவிலுக்கு சென்றோம் என்றால் அங்கு ஒரு வாசனைமிக்க தெய்வீக மணம் வீசிக்கொண்டிருக்கும். அதற்கு அந்த கோவில்களில் பச்சை கற்பூரம் இருப்பதே காரணமாகும். குறிப்பாக பெருமாள் கோவில்களில் நீங்கள் சென்றீர்கள் என்றால் இதனை எளிதில் உணர முடியும். ஒரு தனிப்பட்ட வாசமும் புத்துணர்ச்சியும் அங்கு நிலவிக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் ஒரு தனிப்பட்ட சுவையும் வாசனையும் நிறைந்திருக்கும். அந்த தீர்த்தத்தில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு கலந்து கொடுப்பதால் அவ்வாறு சுவை மிக்கதாக உள்ளது. பச்சை கற்பூரத்திறகு நம் உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய தேவையான மருத்துவ குணம் உள்ளது. எனவே நமது முன்னோர்கள் அதனை தீர்த்தத்தில் கலந்து பயன்படுத்தி வந்துள்ளனர் இப்போதும் அதனையே நாமும் பின்பற்றுகிறோம்.

பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி நமது முன்னோர்கள் பெரிய பாறைகளை தனித் தனியே பிரித்தெடுத்து உள்ளனர். பச்சை கற்பூரத்தை திரவியமாக்கி அதனை பாறைகள் மீது ஊற்றி பாறைகளை தனித்தனியே பிரித்து எடுக்க பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு பெரிய வலிமை மிக்க பாறைகளை தனித் தனியே பிரித்தெடுக்க உதவும் இந்த பச்சை கற்பூரம் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நமக்கு வர இருக்கும் கெடுதல்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து பிரித்து வைக்கும் வல்லமை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஒரு அற்புதமான தனித்துவம் வாய்ந்த ஒரு சக்தி பச்சைக் கற்பூரத்திற்கு உள்ளது. அது என்னவென்றால் பணத்தை முழுவதுமாக தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றது.

நமது வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்திருந்தாலே நமது மனம் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கும். அதற்கு இறைவனது அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இறைவனது அருள் முழுமையாக நமக்குக் கிடைக்க இந்தப் பச்சைக் கற்பூரம் எவ்வாறு நமக்குப் பயன் அளிக்கிறது என்பதை பார்ப்போம்.

ஒரு அகல் விளக்கு அல்லது ஒரு சிறிய பித்தளை தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய் – 2, கிராம்பு – 2, சோம்பு சிறிதளவு இவற்றை சேர்த்து அதனை பூஜை அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இதனால் நமது பூஜை அறை எப்போதும் ஒரு நறுமணத்துடன் இருக்கும். இந்த நறுமணத்தின் மகிமையால் இறைவன் மனம் மகிழ்ந்து நமக்கு இறையருளை முழுமையாக வழங்குவார். இவ்வாறு செய்வதால் நமது வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் விலகி எப்போதும் சந்தோஷமும் மனநிம்மதியும் நிறைந்திருக்கும். இந்த கலவையை இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் மட்டுமே போதும்.

நமது குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க எப்போதும் குறையாத பணவரவு நம்மிடம் இருக்க வேண்டும். நமது தொழிலிலும் நமது பிள்ளைகளின் பணியிலும் வருமானம் அதிகரிக்க வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு இந்த கலவையை சிறிய டப்பாவில் போட்டு ஒரு சிறிய மூடி போட்டு மூடி அதனை நாம் பணம் வைக்கும் பீரோவில் அல்லது அலமாரியில் ஓரமாக வைத்து விட வேண்டும். தொழில் செய்யும் இடம் என்றால் நாம் பணம் வைக்கும் கல்லாப்பெட்டியில் அதனை வைத்து விட வேண்டும். ஒரு சிறிய பச்சை கற்பூர துண்டை எப்போதும் நாம் பணம் வைக்கும் பர்ஸில் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் பணத்தின் வருகை குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். இவ்வாறு பல நன்மைகள் தரும் பச்சை கற்பூரத்தை உங்களது வீடுகளிலும் பூஜை அறை மற்றும் தொழில் செய்யும் இடத்திலும் தொடர்ந்து பயன்படுத்தி வர, வரும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.