முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 751 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 751 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 710 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 39 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 குடும்பங்களை சேர்ந்த 331 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் மேட்டு நில பயிர் செய்கையாளர் 75 பேரிடம் நேற்று(7) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முடிவு வரும் வரை அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் வாடி அமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம், கறுக்குப்பனை, வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்த 5 கடற்தொழிலாளர்களுக்கு  தொற்று இருப்பது கடந்த 2 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 7 பேருக்கு  தொற்று நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவு-நாயாற்று பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கிழ் தொடர்ந்தும் முடக்க நிலையில் உள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நேற்று தெரிவித்தார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (6) தொடக்கம் புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.