நாட்டிலுள்ள தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

நாட்டிலுள்ள தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,000 ரூபாவை 12,500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தனியார் துறை ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நேற்று (07) நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது காணப்படும் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,000 ரூபாவை 12,500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், 2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளட்களின் குறைந்தபட்ச வேதனச்சட்டத்தின் 03ஆவது சரத்தை திருத்துவதாக இது அமையும்.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கோ அல்லது கட்டுப்பாடுகளுக்கோ உட்படாது.

அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று சட்டமா அதிபர் சட்டரீதியான சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய இச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.