மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு தொற்றும் கோவிட்

கோவிட் வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்து தொற்றுவதில்லை எனவும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு தொற்றும் போக்கு காணப்படுவதாகவும் றாகம வைத்திய பீடத்தின் நுண்ணியிரியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் சுனில் சந்திர தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பணியாற்றும் 100 தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு சிங்கத்துடன் நெருங்கிய தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் தோர் என்ற சிங்கத்திற்கு கோவிட் தொற்று இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் சிங்கத்தின் குட்டியும் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட கோவிட் தொற்றின் திரிபு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் தொற்று அடையாளம் காணப்பட்ட முதல் சிங்கமான தோருக்கு அல்பா திரிபு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அல்பா வகை வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் ஒன்றாகும். இவை விலங்குகளிடையே பரவும் ஆபத்து அதிகம்.

குரங்குகளுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். பூனைகள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கான ஓரளவு ஆபத்து காணப்படுகின்றது. மேலும் அறிகுறியற்ற நபரால் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு தொற்று ஏற்பட்டிருக்குமென நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.