இலங்கை வந்த 183 சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தொற்று

கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட நாட்டின் பயணத்தடை மீளவும் தளர்த்தப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் (4) வரை 17,469 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 183 பேர் மட்டுமே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான183 சுற்றுலாப் பயணிகளில் 138 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (05) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எதிர்காலத்தில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது குறித்து இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட ஒழுங்குமுறை சுற்றுலா திட்டத்தின் கீழ் மொத்தம் 2258 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், அவர்களில் 09 பேர் மட்டுமே கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஜூலை 04 வரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர். அந்த எண்ணிக்கை 4,581.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க, நாட்டை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டதன் காரணமாக கொவிட் தொற்றுநோய் பரவியதாக பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று தெவித்தார்.