தாய்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு! 29 பேர் படுகாயம்

ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு தாய்லாந்தின் தலைநகரை உலுக்கியுள்ளது. அனர்த்தத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேங்கொக் நகரின் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலையை அண்மித்த வீடுகளின் ஜன்னல்கள் சிதறியதுடன், கறுப்பு புகைகள் வான் நோக்கி வெளியேற்றப்பட்டன.

அனர்த்தத்தினால் 70 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பின் பத்து மணி நேரம் கழித்து உண்டான தீப்பிழம்புகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருவதாகவும் உள்ளூர் பேரழிவு தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை மற்றும் பேங் ஃபிலி மாவட்ட அலுவலகம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மக்களையும் அவசரமாக வெளியேறுமாறு உத்தரவிட்டது.

தொழிற்சாலை வளாகத்தில் ஐந்து அல்லது ஆறு கிடங்குகளிலும் 50 தொன் இரசாயனங்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.