இலங்கையில் இறக்குமதி செய்யப்படவுள்ள 56,667 சேதன பசளைகள்

செப்டம்பர் முதல் ஆரம்பிக்கும் பெரும்போக விவசாயத்துக்காக 56,667 மெட்ரிக் தொன் சேதன பசளைகள் மற்றும் இயற்கை தாதுக்களை இறக்குமதி செய்ய முன்நிபந்தனை கேள்விப்பத்திரங்களை விவசாய அமைச்சு கோரியுள்ளது.

கொழும்பின் ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, 27,500 மெட்ரிக் தொன் நைட்ரஜன் பசளையும், 29,167 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் மற்றும் பிற கனிமங்களும் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் இலங்கை தரநிலை நிறுவனம் (எஸ்.எல்.எஸ்.ஐ) நியமங்களுடன் இணங்க வேண்டும்.

ஏலம் எடுக்கும் செயல்முறை சர்வதேச போட்டி ஏல நடைமுறைக்கு ஏற்ப நடத்தப்பட்டு ஜூலை 30 ஆம் திகதி விநியோகஸ்தர்களுடன் உடன்படிக்கை செய்துக் கொள்ளப்படும்.

நடப்பு பருவத்தில் எந்தவொரு பசளையையும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் காட்டிவரும் எதிர்ப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த பருவத்திற்கான சேதன பசளைகளை உற்பத்தி செய்வதற்கு அதிக காலம் தேவைப்படும்.

எனவே இதற்கு முன்னரேயே இந்த செயல்முறையை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.