இலத்திரனியல் சாதனங்கள்,வாசனை திரவியங்கள் இறக்குமதி செய்யத் தடை!

அலைபேசி, தொலைக்காட்சி, குளிர்சாதனம் மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட உள்ளதாக தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதனை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலிருந்து அந்நிய செலாவணி வெளியேறுவதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு போதியளவு கிடைக்கும் வரையில் இவ்வாறு இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்படும் என அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதன் மூலம் உள்நாட்டு வர்த்தகர்களை ஊக்கப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கும் என அண்மையில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், இலத்திரனியல் சாதனங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக தனது நிலைப்பாட்டை இதுவரையில் வெளியிடவில்லை.