வீதியில் வளரும் இந்த செடிதான் பல நோய்களுக்கு நிவாரணி தரும் !

முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான் பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும். முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை.
இது ஒரு ஏறு கொடி. வேலி மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. முடக்கத்தான் கீரையின் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்புகள் நீண்டு இருக்கும். முடக்கத்தான் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவுகளாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும்.
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
முடக்கத்தான் கீரை பயன்கள்:-.
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்