2020ம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

2020ம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

வெம்ப்லியில் நடந்த இந்த போட்டியில் முழு ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல்கள் கணக்கில் ஜெர்மன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 1966ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு பெரிய போட்டி தொடரில் நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து முதன்முறையாக ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேத்தரின், இளவரசர் ஜார்ஜ் மற்றும் டேவிட் பெக்காம் ஆகியோர் இன்றைய போட்டியை காண வருகை தந்திருந்தமை சிறப்பு அம்சமாகும். இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.