நீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றாக இணைத்து அற்புதம் புரிந்தவர்கள் நமது முன்னோர்கள். நாம் அனைவருமே வாழ்வில் சிறப்பான பலன்களை பெறுவதற்காகத் தான். அறிவியல் அடிப்படையில் கோயில்களையும், சமயச் சடங்குகளையும் ஏற்படுத்தினர். இந்த சடங்குகளில் பலவற்றில் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன வென்று தெரியாமலே நாம் அதை செய்து கொண்டிருக்கிறோம். அப்படியான ஒரு விடயம் தான் கோயில் குளங்களில் காசு வீசுவது. இச்செயலுக்கு பின்னே இருக்கும் அற்புதமான உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இறைவனுக்கு காணிக்கையாகவும், கோயில் குளங்களை தூர்வார வரும் ஏழை பக்தர்களுக்கு உதவும் என்கிற காரணத்தினாலும் குளங்களில் நாம் பயன்படுத்தும் சில்லறைக் காசுகளை வீசுகிறோம் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் இச்செயலுக்கான உண்மையான காரணம் வேறாக இருக்கிறது

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே செம்பு உலோகத்தால் தான் செய்யப்பட்டன. குறிப்பாக நீர் அருந்துவதற்கும், குளிப்பதற்கும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரையே உபயோகித்தனர். இதனால் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோதிடம் போன்றவை நம் முன்னோர்களுக்கு அதிகம் இருந்தது.

இதேபோன்று அக்காலத்தில் நாணயங்கள் அனைத்தும் செம்பு உலோகத்திலேயே செய்யப்பட்டன. எனவே கோயிலுக்கு சென்று வழிபட்ட நமது முன்னோர்கள் தங்களின் தோஷத்தை போக்கும் வகையிலும், கோயில் குளத்தில் இருக்கும் நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றவும், தங்களிடமிருந்த செப்புக் காசுகள் சிலவற்றை அக்குளத்தில் வீசும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்.

இப்படி பலரும் வீசிய செம்பு காசுகள் கோயில் குளத்தில் நன்கு ஊறி, அந்த செம்பில் இருக்கும் சத்துக்கள் அந்த நீரில் சேர்ந்திருப்பதால் அந்த நீரில் கிருமிகள் வளர்வதை தடுத்ததோடு, அக்குளத்தின் நீரைக் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தியவர்களுக்கு ஆரோக்கியத்தை தந்தது. செம்புக்கு ஆண்களின் உடலில் மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி அதிகம். எனவே தான் அக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் செம்பு காசுகள் நிரம்பி இருக்கும் கோவில் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்ற அறிவியல் உண்மையை சூசகமாக கூறினர்.

காலங்கள் செல்ல செம்பில் காசுகள் தயாரிக்கப்படுவது நின்று, இரும்பு உலோகங்களில் காசுகள் செய்யப்பட்டன. ஆனால் மேற்கண்ட நடைமுறை அறிவியலை அறியாத மக்கள் செம்பு காசுகளுக்கு பதிலாக இரும்புக் காசுகளை கோயில் குளங்களில் போடும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். எனவே முடிந்த வரை பக்தர்கள் செப்புக் காசுகள், பில்லைகள் போன்றவற்றை கோயில் குளங்களில் வீசுவது சிறந்தது என்பது ஆன்மீக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.