85 நாடுகளை ஆட்டிப்படைக்கும் ஆபத்தான டெல்டா வைரஸ்

டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை சுமார் 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கோவிட் வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதில் டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கோவிட் வைரஸ்கள், கிரேக்க எழுத்துக்களான அல்பா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து உருமாறிய வைரஸ்களுக்கு பெயரையும் வெளியிட்டது.

மேலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கோவிட் வைரஸூக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.