இலங்கையில் நாளை முதல் 70 ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் முடிவு

இலங்கையில் நாளை முதல் 70 ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளதாக இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், கோவிட் வைரஸ் பரவாமல் தடுக்க சமூக தூரத்தைப் பராமரிக்கப் பயணிகளுக்கு உதவுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட மற்றும் கம்பஹாவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான பிரதான ரயிலில் 11 ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படும். கரையோரப் பாதையில் 12 ரயில்கள் அலுத்கம, களுத்துறை தெற்கு,வாதுவ , பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய .இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும்.

அவிசாவெல்ல மற்றும் பாதுக்க இடையே களனி வெளி பள்ளத்தாக்கு பாதையில் ஐந்து ரயில்கள். கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு இடையே புத்தளம் பாதையில் எட்டு ரயில்கள் சேவையில் ஈடுபடும்.

இதேவேளை அத்தியாவசிய சேவைகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ஜூன் 28 முதல் மாகாணங்களுக்கு இடையில் (கண்டி முதல் கோட்டை, பெலியத்த , மருதானை மற்றும் மாஹோ முதல் கோட்டை வரை) ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டிருந்தாலும், தேசிய கோவிட் -19 தடுப்புக் குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.