அம்பலந்தொட பகுதியில் வீதியில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று

அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பிரதேசத்தின் வீதிக்கு அருகில் வீதியில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயிரிழந்த நபர் வசித்து வந்த வீடு மற்றும் அவர் சென்று வந்த 4 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திலகபுர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

64 வயதுடைய குறித்த நபர் வீதியில் மயங்கி விழுந்ததன் பின்னர் அவரின் புதல்வர்கள் இருவர் அவருக்கு செயற்கை சுவாசத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எஹலியகொடை பிரதேசத்தில் புதிதாக 35 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் போபெத்த, இத்தமல்கொட மற்றும் கெடஹெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.