முல்லைத்தீவு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை தாக்கிய யானை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய முறிகண்டிப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (22) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ – 9 வீதியின் பழைய முறிகண்டிப் பகுதியில் 236 ஆவது கிலோமீற்றருக்கும் 237 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவரை வீதியால் சென்றவர்களால் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் திருமுருகண்டியைச் சேர்ந்த 37 வயதுடைய பிரான்சிஸ் சத்தியதரன் எனும் குடும்பஸ்தரே படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையைக் காட்டுக்குள் விரட்டி விடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.