சீனாவிலிருந்து இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள்

ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால் சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து இந்தத் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதனிடையே, நாட்டில் கோவிஷீல்ட்டின் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும், இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 290 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் 14 இலட்சத்து 4 ஆயிரத்து 470 பேருக்கும், இரண்டாவது டோஸ் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 592 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஸ்பூட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 454 பேருக்கும், இரண்டாவது டோஸ் 14 ஆயிரத்து 301 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 82 ஆயிரத்து 166 ஆகப் பதிவாகியுள்ளது.