மன்னார் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 159 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 159 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் புத்தாண்டு கொத்தணியோடு அதிகமான இள வயதினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று   இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை   மாலை கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் மேலும் புதிதாக 10 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து ஜீன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 159 கோவிட் தொற்றாளர்களும், இந்த இந்த வருடம் 649 கோவிட் தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 666 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் புத்தாண்டு கொத்தணியோடு தொடர்புடைய 322 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிப்பவர்களாக அல்லது தொழில் செய்பவர்களாக 242 தொற்றாளர்கள் காணப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் நானாட்டான், மடு, மாந்தை மேற்கு, முசலி பிரதேசங்களை சேர்ந்தவர்கள். புத்தாண்டு கொத்தணியோடு தொடர்புபட்ட நபர்கள் இள வயது உடையவர்களாகவும் தொழில் செய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றார்.

இந்தப் புத்தாண்டு கொத்தணியோடு தொடர்புபட்டவர்கள் 49 பேர் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள். இவர்களில் பலர் சிகிச்சையை நிறைவு செய்து வீடு திரும்பி இருக்கின்றார்கள்.

இந்த பயணத்தடை தளர்வு நாட்களில் மீன் பிடி வாடிகள் , தொழிற்சாலைகள் போன்ற நெருக்கமான இடங்களில் பணிபுரிபவர்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து உங்களுடைய கடமைகளை செய்ய வேண்டும்.

ஏதேனும் குணங்குறிகள் தென்பட்டால் வீடுகளிலேயே உங்களை நீங்கள் சுய தனிமைப் படுத்திக் கொண்டு பின்னர் சுகாதார துறையினருக்கு அறிவியுங்கள்.

மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற இடைநிலை சிகிச்சை நிலையத்தில் இது வரையில் 400 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 306 பேர் சிகிச்சை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பி இருக்கின்றார்கள்.

இதில் இரண்டாவது கோவிட் இடை நிலை சிகிச்சை நிலையமானது நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இவை அடுத்த வாரம் நடை முறைக்கு வருவதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன என  குறிப்பிட்டார்.