பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு !

நாட்டில் கோவிட் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கோவிட் தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால் பல்வேறு காரணங்களால் இணைய வசதியை பெற முடியாத மாணவர்களுக்கு ‘பிராந்திய கற்றல் மையங்கள்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மாதம் 17 ஆம் திகதி பிராந்திய கற்றல் மையங்களை அமைக்க கல்வி அமைச்சு, அனைத்து மாகாண கல்வி இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் சிறிய குழுக்களாக கிராமப்புறங்களில் கூட்ட மையங்களை அமைக்கும் திட்டங்கள் உள்ளதாகவும், தற்போது அந்த மையங்களை அடையாளம் காண்பது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.