இன்று திறக்கப்பட்ட இலங்கை! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடாளவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. 23ம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் தொடர்ந்து காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த காலப் பகுதியில் மிகுந்த அவதானத்துடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்தியாவில் வேகமாக பரவிவரும் அபாயகரமான டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகெ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வேறு எந்தவொரு நடவடிக்கைகளுக்காகவும் வெளியில் செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்றால், இந்த காலப் பகுதியில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.