மகன் தற்கொலை – துயரம் தாங்காத தாய் மாரடைப்பால் மரணம்

மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் என்பரும் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் இரண்டு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஏறாவூர் ஐயங்கேணியிலுள்ள அவரது தாயார் தனிமையில் வாழ்ந்து வரும் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் மகனை காணவில்லை என தாயார் தேடிய நிலையில் அறைக்கதவு பூட்டப்பட்டுள்ளதையடுத்து உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உட்சென்றபோது அங்கு கூரையில்  கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டுள்ளார்.

இதனையடுத்து புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயாருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்