பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு சீல்

பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்குத் தனிமைப் படுத்தல் சட்டத்தின்கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை(17) முழுநாளும் மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதி உட்பட உள் வீதிகளிலும் பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பயணத்தடையை மீறி வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் எம். எம் ஜவாகிர் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உட்படப் பலரும் இந்நடவடிக்கையில் பங்கு கொண்டுள்ளனர்.