கொரோனாவில் இருந்து விடுதலை… ரொறன்ரோ மருத்துவமனை அறிவிப்பு

ரொறன்ரோ மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 14 மாதங்களில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


University Health Network என்ற மருத்துவமனை குழுமம் குறித்த தகவலை தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 26ம் திகதி முதல் தங்களது அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 14 மாதங்களில் முதல்முறையாக ரொறன்ரோ பொதுமருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட அவசர சிகிச்சை பிரிவில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த நிலையை எட்ட உதவிய ஊழியர்களுக்கு மருத்துவமனை குழுமம் சார்பில் பாராட்டுதல்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று Toronto Western மருத்துவமனையானது கொரோனாவுக்கான சிறப்பு பிரிவை மூடிவிட இருப்பதாகவும், தங்கள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எவரும் இல்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

ஜனவரி 2020 முதல் Toronto Western மருத்துவமனையில் மொத்தம் 1,698 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.