யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். குப்பிளான் தெற்கு பகுதியை சேர்ந்த சுதாக்கினி அன்னலிங்கம் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த குடும்பப் பெண், சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை வீட்டில் உள்ளோர் நித்திரையால் எழும்ப முன்னர் தான் நித்திரையால் எழுந்து வீட்டுக் காணியைக் கூட்டி குப்பைகளுக்குத் தீ வைத்துள்ளார்.

அந்தத் தீயில் முக குப்புற விழுந்து கடும் தீக்காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காலை கணவன் எழுந்து மனைவியைத் தேடியபோதே எரிந்த குப்பைகளுடன் மனைவியின் சடலம் காணப்பட்டதை அவதானித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்த்துடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான யாழ். போதன வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த பெண் நோய்வாய்ப்பட்டு இருந்தார் எனவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும், காலை குப்பை மூட்டிய பின்னர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேல் விழுந்திருக்கலாம் எனவும் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.